ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 30 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருக்கும் நிலையில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று நேரில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில், அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் எனக் கூறினார்.
இதற்கு அமலாக்கத் துறை சார்பில், “வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” பதில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ். அல்லி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
அப்போது, “இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும்” செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மெமோவை பெற்றுக் கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி, பின்னர் மெமோவை தற்போது பெற்றுக் கொள்வதாகவும், அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.