கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்டார்.அந்தத் தேர்தலின் போது அமைச்சர் பெரிய கருப்பன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில், அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக 2 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் இல்லை. அதனால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று (16-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேசன், அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.